Script

Monday, September 22, 2014

நீதிக் கதைகள் - புத்திமான் பலவானாவான்

          ஒரு இடையன்,  தன வெள்ளாடுகளை மழைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு மந்தையோடு கொண்டு போனான். ஆடுகள் மாலை நேரம் நன்றாக மேய்ந்து கொண்டிருந்தன.

          திடீரென பலமான காற்று வீசியது. சிறிது நேரத்தில் மேகங்கள் திரண்டு ஒளியை மறைத்தன. மழைக்காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது.

          ஆட்டுக்காரன் ஆடுகளை அவசர அவசரமாக விரட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.

          மந்தையை விட்டுப் பிரிந்த ஆடு ஆண் வெள்ளாடு. மிகப்பெரிய ஆடு. கொம்பும் தாடிகளும் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். தைரியம் மிக்கது. அது தனியாக ஒதுங்கி, புதர்களுக்குள் சென்று உணவு வேட்டையில் ஈடுபட்டிருந்ததால், இந்தக் காற்றையும் மழையையும் எதிர்பார்க்கவில்லை. அதன் கழுத்தில் மணி கட்டியிருந்தான்.

          பெரும் மழை. நன்றாக இருட்டிவிட்டது. புதரிலிருந்து ஓடி வந்த ஆடு, தன சக ஆடுகளைக் காணாது திகைத்தது. பின், வீடு செல்வதற்காக வேகமாக ஓடியது. அப்போது புதர்களுக்கிடையில் குகை ஒன்று இருந்ததைப் பார்த்து விட்டது.

          அதைக் கண்ட ஆடு சட்டென குகைக்குள் நுழைந்து கொண்டது. உள்ளே நுழைந்ததும் தன மீதிருந்த மழை நீரை உதறியது. அப்போது கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஒலித்தது.

          ஆடு மோப்பத்தால், இது ஒரு சிங்கம் அல்லது புலியின் குகையாக இருக்கும் என்று எண்ணியது. அதை நிரூபிக்கும் வகையில், எலும்புகள் காலில் இடறின.

          என்றாலும் அது பயந்து விடவில்லை. தைரியத்தை கைவிடவில்லை. வருவது வரட்டும் சந்திப்போம் என்று திடமாகவே இருந்தது.

          அப்பொழுது சிங்கம் குகைக்கு வந்தது, உள்ளே இனம் புரியாத மிருகம் ஒன்று இருப்பதைக் கண்டு, வெளியில் நின்றபடி கர்ஜித்தது.

          "யாரடா அவன், என் குகைக்குள்?" என்று கேட்டது சிங்கம். அதற்கு ஆடு "வாடா வா, இதுவரை 99 சிங்கங்களை கொன்றிருக்கிறேன். உன்னையும் கொன்றால்தான் 100 ஆகி என் விரதம் முடியும். அதற்காகத்தான் வந்தேன். உள்ளே பார்த்தால் நீ இல்லை. நீ வரும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. உம... வா சீக்கிரம்..." என்றது ஆடு.

          சிங்கம் இதைக் கேட்டு பயந்து விட்டது. தாமதித்தால் அந்த மிருகமே வெளியில் வந்தால் என்ன செய்வது? என்று எண்ணியபடி பயந்து ஓடியது, மழையில் நனைந்தபடி.




          சிங்கம் ஓடிக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு நரி வந்தது. "ராஜாவே, எங்கே இப்படி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருகிறீர்கள்?" என்று கேட்டது அந்த நரி.

          "நரியாரே, என் குகைக்குள், ஒரு விசித்திர மிருகம், கொம்புகளும், அடர்ந்த தாடி மீசைகளோடும், கழுத்தில் மணியோடும் இருக்கிறது. அது என்னைக் கொன்று தின்னக் காத்திருப்பதாகக் கூறுகிறது" என்று நடந்தவற்றைக் கூறியது சிங்கம்.

          அதற்கு நரி, "ராஜாவே, நீங்கள் அடையாளங்களைக் கொண்டு பார்த்தால், அது ஒரு வெள்ளாடாகத்தானிருக்க வேண்டும். எதற்கும் வாருங்கள் திரும்ப குகைக்கு போய்ப் பார்க்கலாம். நானும் துணையாக வருகிறேன்" என்றது நரி.

          சிங்கம் சம்மதிக்கவில்லை. இன்னும் அது பயத்தால் நடுங்கியபடியே இருந்தது. நரி, "அரசே, பயப்படாதீர்கள். நான் உங்களோடு வருகிறேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டால், நம் வால்களை ஒன்றோடொன்று முடிந்து கொள்ளலாம்" என்று பல விதத்திலும் சொல்லி சிங்கத்தின் பயத்தைப் போக்கியது.

          சிங்கமும் நரியும் சேர்ந்து குகையை நோக்கிச் சென்றன. இவை சேர்ந்து வருவதை அறிந்த வெள்ளாடு, வருவது வரட்டும் என்ற தைரியத்துடன், "வாரும் நரியாரே! ஓடிப்போன சிங்கத்தை கூட்டிவா என்றுதானே உன்னை அனுப்பினேன்? நீ கட்டியே இழுத்து வந்து விட்டாய். நண்பன் என்றால் உன் போன்ற நண்பர்களே உத்தமர்கள். ஏன் வெளியில்  நிற்கிறாய், சிங்கத்தை உள்ளே இழுத்து வா. எனக்குப் பசி அதிகமாகி விட்டது. என் விரதத்தை இன்றோடு முடிக்க வேண்டும்" என்று கூறியது.

          அதைக் கேட்ட சிங்கம், நரி நம்மை ஏமாற்றிக் கூட்டி வந்துவிட்டது என்று எண்ணி, முழு வேகத்தோடு ஓடியது. வாலில் கட்டப்பட்டிருந்த நரி, கல்லிலும் முள்ளிலும் சிக்கி உயிர் விட்டது.

          மழை நின்றது. இன்னும் நாம் குகைக்குள்ளிருப்பது ஆபத்தாக முடியும் எனக் கருதிய வெள்ளாடு வீட்டை நோக்கி வேகமாக ஓடியது.

          நீதி: உயிராபத்தான வேளையில் திடபுத்தியும் தைரியமும்தான் கை கொடுக்கும் 


No comments:

Post a Comment