Script

Tuesday, September 23, 2014

பீர்பால் கதைகள் - குட்டு வெளிப்பட்டது

           வெளிநாடுகளில் சென்று திரவியம் தேடிச் சம்பாதிக்கும் ஒரு வயதான முதிர்ந்த தனவான் பீர்பாலின் வீட்டருகில் குடியிருந்தார். அவர் தேவாலய தரிசனம் செய்வதற்காக சிறிது பொற்காசுகளோடு புறப்பட்டுச் சென்றார்.

           ஒரு காட்டின் நடுவில் பாடல் பெற்ற ஸ்தலம் ஒன்று இருந்தது. கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பினால் நன்றாக இருட்டிவிடும். பணப்ப்பையோடு செல்வது ஆபத்து என்று அறிந்தார். ஆதலால் அதை எப்படி பத்திரப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தார், புளிய மரத்தின் நிழலில்.

           அந்தக் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவன் இவரைப் பார்த்துவிட்டு அருகில் வந்தான். "என்ன பெரியய்யா? கோவிலுக்குப் போகிறீர்களா! இருட்டிவிட்டது பத்திரமாகப் போய் வாருங்கள்" என்று கூறினான்.

           அவன் அவருடைய ஊர்க்காரன் மெட்டுமல்ல, அந்தத் தெருவிலேயே குடியிருப்பவனும் கூட. அவனிடம் அந்தத் தனவான், "தம்பி, நீயா? நீ இங்கு வருவது தெரிந்திருந்தால் உன்னுடன் வந்திருப்பேனே" என்றார்.

           "சரி, எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்றார் தனவான்.

           "என்ன பெரியய்யா அப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் காலால் இட்டால் தலையால் செய்வேன்" என பணிவுடன் கூறினான்.

           "தம்பி, இந்தப் பையில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் பல கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.திரும்பி வந்ததும் வாங்கிக் கொள்கிறேன். அதுவரை இதைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். உன்னால் முடியுமா?" என்றார்.

           அவன் "இந்தப் புளியமரம் சாட்சியாக இதைப் பாதுகாப்பேன்" என்று சொல்லி அந்தப் பண முடிப்பை வாங்கிக் கொண்டான். தனவந்தரும் ஆலய தரிசனத்திற்காகப் புறப்பட்டுப் போனார். பக்கத்துக்கு வீட்டுக்காரனும் ஊருக்குப் புறப்பட்டுப் போனான்.


           தனவந்தர் சிறிதுகாலம் சென்று ஊர் திரும்பினார். பக்கத்துக்கு வீடுக்கரனிடம் சென்று பண முடிப்பைக் கேட்டார்.

           அவன் ஒன்றும் அறியாதவன் போல நடித்தான். "பண முடிப்பா?.. ஆயிரம் பொற்காசுகள்... என்ன இது, கேலியா, கிண்டலா?... இல்லை புத்தி மாறாட்டம் ஏற்பட்டுவிட்டதா? இல்லை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா? அப்படித்தானிருக்கும். அவர்களிடம் போய்க் கேளும். என்னிடம் வந்து ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள்" என்று கூறிவிட்டான்.

           தனவந்தர் நயமாகவும், மிரட்டியும் பார்த்தார். அவன் மசியவில்லை. மறுத்து விட்டான்.  அவமானப்ப்படும்படி திட்டினான். தனவந்தருக்கு வேறுவழி தோன்றவில்லை. நேராகப் போய் பீர்பாலிடம் முறையிட்டார்.

           அதற்கு பீர்பால், "பெரியவரே, நீர் வருத்தப்பட வேண்டாம். உங்களுடைய பண முடிப்பு உங்களுக்குக் சிடிக்க முயற்சிக்கிறேன். நாளை அரண்மனைக்கு வாருங்கள்" என்று கூறி, தனவந்தரை அனுப்பி வைத்தார்.

மறுநாள் அரண்மனைக்கு வந்த தனவந்தர் அரசரிடம் முறையிட்டார். அதற்கு அரசர் பீர்பாலிடம் "நீரே இந்த வழக்கை விசாரியும்" என்று கூறினார்.

           பீர்பால் அந்த பக்கத்து வீட்டுக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவன் பீர்பால் முன் பணிவுடன் வந்து நின்றான்.

           "தம்பி, இந்த பெரியவர் உன்னிடம் உன்னிடம் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாரா?" என்று கேட்டார் பீர்பால்.

           "இல்லை அய்யா! இவர் பொய் சொல்கிறார். இவர் எங்கு யாரிடம் கொடுத்து ஏமாந்தாரோ! சொல்வதெல்லாம் பொய்" என்று சப்தமிட்டு சொன்னான்.

           "பெரியவரே, நீங்கள் இவனிடம் பண முடிப்பைக் கொடுத்ததற்கு சாட்சியுண்டா?" என்று கேட்டார் பீர்பால்.

           "இல்லை அய்யா! காட்டு வழியில் ஒரு புளிய மரத்தின் கீழ்தான் இவனிடம் என் பண முடிப்பைக் கொடுத்தேன்" என்றார் தனவந்தர்.

           "பெரியவரே, நீர் சொல்வது பொய் என்று தெரிகிறது. சாட்சிகள் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தேன் என்றால் எப்படி? உமக்கு எந்தப் புளியமரம் வந்துதான் சாட்சி சொல்ல வேண்டும். போய் அழைத்து வாரும்" என்று கூறினார் பீர்பால்.

           இதைக் கேட்ட தனவந்தருக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. தன்னைத் தானே நொந்து கொண்டார். பின் பீர்பாலை ஆச்சர்யத்தோடு பார்த்து "அய்யா நியாயமான நீதி கிடைக்குமென்று நம்பினேன். எனது மனவேதனையில் புளிய மரத்தைப் பற்றிச் சொன்னேன். நீங்கள் அந்தப் புளிய மரத்தையே சாட்சிக்கு அழைத்தாள் எப்படி! நடக்ககூடிய காரியம் ஏதாவது சொல்லக் கூடாதா?" என்று பரிதாபத்தோடு கேட்டார்.

           உடனே பக்கத்து வீட்டுக்காரன் உற்சாகத்தோடு, "அந்தப் புளியமரம் இங்கு வந்து சாட்சி சொன்னால், நீங்கள் என்ன தண்டனை அளித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறினான்.

           பீர்பால் அவனைக் கூர்ந்து பார்த்தார். புளியமரம் வந்து சாட்சி சொல்லாது என்ற திட நம்பிக்கையில் இப்படிக் கூறுகிறான் என்று எண்ணினார்.

           பின்னர் பீர்பால், அந்த தனவந்தரைப் பார்த்து "நீங்கள் உடனே அங்கு சென்று அந்த மரத்தை நான் சாட்சிக்கு அழைத்ததாகக் கூறுங்கள். அது நிச்சயம் வரும். உடனடியாகக் கூட்டி வாருங்கள்" என்றார்.

           நம்பிக்கையற்ற தனவந்தர் உத்தரவுப்படி நடக்கத் தீர்மானித்தார். காட்டை நோக்கிப் புறப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரனுக்கு மிக சந்தோஷம். ஏன் என்றால் மரம் எப்படி இங்கு வரும், பேசும்? என்பதால்.

           வெகு நேரமாகியும் தனவந்தர் வராததைக் கண்ட பீர்பால், எங்கே பெரியவர் போயிருப்பார்?... எவ்வளவு தூரமோ... என்று கூறிக் கொண்டிருந்தார்.

           அதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரன், "அந்தக் காடு இங்கிருந்து சுமார் நான்கு மைலிருக்கும். அங்கு எல்லாமே புளிய மரங்கள்தான். பாவம் இவர் எந்த மரத்தை அழைத்து வருவாரோ" என்று ஏளனமாகக் கூறினான்.

           அதைக் கேட்ட பீர்பால், "அப்படியானால் உனக்கு இது எல்லாம் எப்படித் தெரிந்தது" என்று கேட்டார். அப்போதுதான் அவன் தன முட்டாள்தனமான வார்த்தைகளே தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்தான்.அவனுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டது.

           காட்டிற்குப் போன தனவந்தர் அப்போது திரும்பி வந்தார். "அய்யா! எனக்கு எந்த மரம் என்று தெரியவில்லை. அடையாளம் காணாததால் அழைத்துவர முடியவில்லை" என்று அழாக்குறையாகக் கூறினார்.

           அதற்கு பீர்பால், வருந்த வேண்டாம் பெரியவரே, அந்தப் புளிய மரம் இங்கு வந்து உங்களுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லிவிட்டுப் போய்விட்டது" என்றார்.

           தனவந்தருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை... பக்கத்து வீட்டுக்காரன் திரு திரு என்று விழித்தான்.

           பீர்பால் அவனைக் கோபமாக "இப்பொழுது நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டார்.

           அதற்கு அவன், "அய்யா அய்யா! என்னைத் தண்டித்து விடாதீர்கள். நான் அவருடைய பண முடிப்பை அப்படியே குறைவின்றி ஒப்படைத்து விடுகிறேன்" என்று பீர்பாலின் காலடியில் விழுந்தான்.

           தனவந்தர் பீர்பாலை வாழ்த்தினார்.

No comments:

Post a Comment