Script

Wednesday, September 24, 2014

நீதிக் கதைகள் - சோம்பித் திரியேல்

           ஒரு ஊரில் ஒரு விவசாயக் குடிமகன் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். தந்தை நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடுவார். மகன்களோ சோம்பேறிகளாக ஊரைச் சுற்றித் திரிவார்கள்.

           விவசாயி தன் மகன்களை விவசாயத்தில் பழக்க அவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் உழுது பயிரிட முன்வரவில்லை. அதற்காக வருந்தினார் விவசாயி.


           புத்திரர்கள் உழைக்க மறுக்கிறார்களே, சோம்பேறித்தனமாக இருக்கிறார்களே! என்று கவலைப்பட்டு மனம் நொந்து நோயாளியாகிப் படுத்து விட்டார்.

           வைத்தியர் வந்து பார்த்துவிட்டு, "இது நோயல்ல, மனக் கவலையே" என்று கூறினார். மகன்கள் நான்கு பெரும் தந்தைக்கு கவலையை விட்டுவிடும்படி அறிவுரை கூறினார்களேயன்றி, அவர்கள் உழைக்க முன்வரவில்லை.

           விவசாயத் தந்தையின் அந்திமக் காலமும் நெருங்கி விட்டது. தன் மகன்கள் நால்வரையும் அழைத்தார் விவசாயி.

           "நான் இனிப் பிழைக்கமாட்டேன். உங்கள் நால்வருக்காக என் தந்தையின் சொத்துக்களை விற்று தங்க நாணயங்களாக மாற்றி இந்த வயலின் எங்கோ ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தேன். எந்த இடம் என்று இப்போது ஞாபகமில்லை. அதை எப்படியாவது கண்டுபிடித்து, எடுத்துப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு இறந்துவிட்டார்.

           தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்ட மகன்கள் நால்வரும் வயலுக்குச் சென்று பூமியைக் கொத்திப் புதையலைத் தேட ஆரம்பித்தனர்.

           வயல் முழுவதும் நன்றாகக் கொத்திச் சுத்தமாக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு விட்டது. புதையல் கிடைக்கவில்லை. என்றாலும் தங்கள் உழைப்பு வீணாகாமல், வயலில் நெல் சாகுபடி செய்தனர். மழையும் நன்றாகக் காலந்தவறாமல் பெய்தது. நெல்லும் நல்ல விளைச்சல் கண்டது.

           நெல் மூலம் மிகுந்த வருமானம் பெற்ற மகன்கள், "தந்தை சொன்ன புதையல் இதுதான் - இந்த நிலமும் நம் உழைப்பும்தான்" என்பதை நன்கு உணர்ந்தனர். உழைப்பாளிகளாகவும் மாறினார்கள்.

நீதி: உழைப்பே உயர்வுக்கு உறுதுணை

No comments:

Post a Comment