Script

Monday, September 22, 2014

பீர்பால் கதைகள் - நம்பிக்கை

             முஸ்லிம் மத குரு ஒருவர் அக்பரை காண வந்திருந்தார். அக்பர் மத ஆசாரப்படி அவரை வரவேற்று உபசரித்தார். அவரை வழியனுப்பி வைக்கும்போது நிறைய பரிசுகள் கொடுத்தார்.

             அவர் சென்ற பின் அரசர் பீர்பாலை நோக்கி, "பீர்பால், உங்கள் மதத்திலும் இம்மாதிரி மதகுருக்கள் இருகிறார்களா?" என்று வினாவினார்.

             அதற்கு பீர்பால், "எங்கள் மதத்திலும் இருகிறார்கள். அவர்கள் மலை குகைகளிலோ, ஆசிரமங்களிலோ வசிப்பார்கள். மக்களிடத்தில் அதிகம் தொடர்பு கொள்ளமாட்டார்கள்" என்று சொன்னார்.

             "எங்களுடைய மத குருக்கள் சகல சக்திகளும் கைவரப் பெற்றவர்கள். அவர்களை வணங்குவதாலேயே பல காரியங்களும் சித்தி பெரும்." என்றார் அக்பர்.

              "எங்கள் காரியங்கள் வெற்றியடைய வேண்டுமானால், நாங்கள் கோவிலுக்கு சென்று, நேரடியாக இறைவனிடமே முறையிட்டு கொள்கிறோம். அதனால் நடுவில் ஒருவர் தயவை எதிபார்க்க வேண்டியது இல்லாமல் போகிறது." என்றார் பீர்பால்.

              "மேலும் இறைவன் மேல் நமக்கு ஏற்படும் நம்பிக்கையின் வலுவால் நினைத்த காரியம் வெற்றி பெறும்" என்றும் கூறினார் பீர்பால்.

             "அப்படியானால் அந்த நம்பிக்கையின் பலனை நிரூபித்து காட்ட முடியுமா?" என்றார் அரசர்.

              "நினைத்த காரியம் வெற்றியடைய முழு நம்பிக்கையால் முடியும் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்" என்றார் பீர்பால்.

             "எவ்வளவு கால தாமதம் ஆனாலும் பரவில்லை. நீ செய்து காட்டு" என்று கூறினார் அக்பர்.

              ஒரு நாள் பீர்பால் அரசரின் மிதியடிகளை திருடிச் சென்று விட்டார். பீர்பால், அதனை ஒரு பட்டுத் துணியால் மூடி, இரவு நேரத்தில் யாரும் அறிய வண்ணம், நகரின் வெளிப்புறத்தில் ஓர் மரத்தடியில் புதைத்தார். அதன் மேல் ஓர் அழகிய சமாதியை எழுப்பினார். அந்த சமாதியின் அருகே சாம்பிராணி புகை போடவும், வரும் பக்தர்களை கவனிக்கவும் ஆட்களை நியமித்தார்.

             " இது யாருடைய சமாதி என்று யாரும் கேட்டால், இவர் ஒரு பெரிய மதகுரு என்று சொல்லிவிட வேண்டும். இதை வணங்கி விட்டு செல்பவர்களின் காரியங்கள் சித்தி அடைகின்றன என்றும் கூற வேண்டும்" என்று சொல்லி வைத்தார். அதன்படி வேலையாட்கள் நாதனது கொண்டனர்.

             நாளாக நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். தங்களின் காரியங்கள் நிறைவேறியவர்களின் காணிக்கை பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

              இந்த சமாதியின் சிறப்பை அரசரும் கேள்விப்பட்டார்.

             ஒரு நாள் நமது மந்திரி, அதிகாரிகளோடு அரசர் அந்த சமாதிக்கு வந்தார். அப்போது அக்பர் பீர்பாலிடம் "பீர்பால், எங்கள் மதகுருவின் மகிமையை பார்த்தாயா? அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி, அல்லாவிடம் சென்றாலும் சரி அவர்களுடைய புகழ் அழிவதில்லை. அவர்களுடைய சக்தி, அவர்கள்  இருந்தாலும் இறந்தாலும் இறவாப் புகழை கொடுக்கிறது".

              "ஆதலால் நீயும் இதை வணங்கு, நமது கவலைகள் மறையும். நமது எண்ணங்கள் ஈடேறும், மன அமைதி உண்டாகும்" என்று கூறினார் அக்பர்.

             "அரசே, உங்களுடைய ஆசைகளை இந்த மகான் நிறைவேற்றி வைத்தால், நிச்சயம் நான் இதை வணங்குவேன்" என்றார் பீர்பால்.

              "இன்னுமா உனக்கு நம்பிக்கை வரவில்லை? இதோ உன் எதிரிலே வேண்டிக் கொள்கிறேன். மகானே, மேவார் மன்னன் பிரதாப சிம்மனை நான் வெற்றிகொள்ள தாங்கள் அருள் புரிய வேண்டும்."




             "வெற்றி பெற்றால் தங்கள் சமாதிக்கு விலை உயர்ந்த ரத்தினக் கம்பளம் பரிசளிக்கிறேன்" என்று சமாதியின் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டார்.

              அப்போது ஒரு குதிரை மீது படைவீரன் ஒருவன் வந்தான். அவன் அரசன் முன் மண்டியிட்டு வணங்கி விட்டு, "சக்கரவர்த்தி அவர்களே, மேவா மன்னன் பிரதாப சிம்மன் தோற்றுவிட்டான். நமது வீரர்கள் வெற்றிபெற்று, அவனையும் கைது செய்து உள்ளார்கள்." என்று கூறினான்.

             அதை கேட்ட அரசர் மகிழ்ச்சி கடலில்  ஆழ்ந்தார். அவ்வீரனுக்கு தனது முத்து மாலையை பரிசாக அளித்தார்.

              பின் பீர்பாலை நோக்கி, "பீர்பால், இப்பொழுதாவது இந்த மதகுருவின் மகிமையை ஒப்புக் கொள்கிறாயா?" என்றார்.

              "இதை கூட நான் மகானின் அருள் என்று கொள்வதற்கில்லை. உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் பயன் தான் உங்கள் வெற்றி என்றே கருதிகிறேன்." என்றார் பீர்பால்.

              "நீ உன் பிடிவாதத்தை விடு, இப்படிப்பட்ட மகானின் சமாதிக்கு நீ வணக்கம் செய்யாவிட்டால், உனக்கு மரண தண்டனை விதிப்பேன்" என்று கோபத்துடன் கூறினார் அக்பர்.

             உடனே பீர்பால் சமாதியின் முன் மண்டியிட்டார். என் மீது என் அரசர்
எக்காலத்திலும் கோபம் கொள்ளாமலும், எனக்கு எவ்வித தண்டனை அளிக்கமாலும் அருள வேண்டும். அப்படி அருளினால், தங்கள் சமாதியை மேலும் அழகிய முறையில் கட்டுகிறேன்." என்று வேண்டிக் கொண்டார் பீர்பால்.

             "இப்பொழுதாவது உனக்குப் புத்தி வந்ததே! உன் கோரிக்கையை மகான் நிச்சயம் நிறைவேற்றுவார்" என்றார் அக்பர்.

             உடனே பீர்பால் சமாதியின் மேலுள்ள மலர்களை அகற்றுமாறு அங்குள்ள வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டார். அதைக் கண்ட அரசர் கோபமுற்றார். பீர்பால் அக்பரை நோக்கி,

             "அரசே! உங்கள் மகான் மகிமை வாய்ந்தவர். உங்களுடைய கோபத்திலிருந்து நிச்சயம் என்னைக் காப்பார்" என்று கூறியபடி பீர்பால் சமாதிக் கற்களை அகற்றி விட்டு, அதனுள்ளிருந்த பட்டு மூட்டையை எடுத்து வந்து அரசரின் முன்னால் வைத்து அவிழ்த்தார்.

             அந்த மூட்டைக்குள், முன்பு காணாமல் போன அரசரின் மிதியடிகள் இருந்தன. அதைக் கண்ட அரசர் "இவை என்னுடைய செருப்புகள் அல்லவா?" என்று வியப்போடு கேட்டார்.

             "ஆம் அரசே! இதைத்தான் இவ்வளவு நாட்களாக மக்கள் நம்பிக்கையோடு வணங்கி வந்தனர். தாங்களும் மண்டியிட்டு வணங்கினீர்கள். என்னையும் வணங்க வைத்தீர்கள்" என்றார் பீர்பால்.

             "என்னுடைய வேண்டுதல் உடனே பலித்ததே அது எப்படி?" என்று கேட்டார் அக்பர்.

             "அதுதான் அரசே, நம்பிக்கை! தாங்கள் உண்மையாக இது மகானின் சமாதி என்று பெரு நம்பிக்கை கொண்டு வேண்டினீர்கள். இதே போலத்தான் நாங்களும் எங்கள் கோவில்களில், கடவுளை நம்பி வழிபடுகிறோம். அதனால் காரிய சித்தியடைகிறோம்"

             "பலர், பல விதமான உருவங்களை அமைத்துக் கொண்டு வழிபடுவதும், சாணம், மஞ்சள் போன்றவற்றை பிடித்து வைத்து வழிபடுவதும், இவை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில்தான். உருவம் பலவானாலும், இறைவன் மேல் ஏற்படும் பெரும் நம்பிக்கையால் சித்தியடைகிறோம்" என்றார் பீர்பால்.

             அரசர் அவருடைய அறிவார்ந்த விளக்கத்தைக் கண்டு அக மகிழ்ந்தார்.


No comments:

Post a Comment